இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி - எவர்டன் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியின் முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் எவர்டன் அணியை வீழ்த்தியது. இப்போட்டியின்போது எவர்டன் அணியின் மிட்ஃபீல்டர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் காயம் காரணமாக ஆட்டத்தின் பாதிலேயே வெளியேறினார்.
இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், ரோட்ரிக்ஸிற்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அடுத்த இரண்டு போட்டிகளில் ரோட்ரிக்ஸ் பங்கேற்க மாட்டார் என அந்த அணியின் உரிமையாளர் கார்லோ அன்செலோட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கார்லோ, போட்டியின்போது "தலைப்பகுதியில் காயமடைந்த ரிச்சர்லிசன்னின் நிலை குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். அதனால் அவருக்கு மாற்று வீரரை ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். மேலும் காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் மிட்ஃபீல்டர் ரோட்ரிக்ஸ் பங்கேற்கமாட்டார்.
அதேசமயம் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான தோல்வி எங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து எங்களது திறனை வெளிப்படுத்துவோம். அதனால் ஷெஃபீல்ட் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியில் வெற்றியைப் பெறுவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: பும்ரா, அஸ்வினின் பந்துவீச்சில் சுருண்ட ஆஸ்திரேலியா!