ஸ்பெயினில் 2019-20 சீசனுக்கான லா லிகா கால்பந்து தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் புள்ளிகளின் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி 87 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து 34ஆவது முறையாக லா லிகா பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணி வரும் ஆகஸ்ட் ஏழாம் தேதி மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் தொடரின் நாக் அவுட் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் விளையாட உள்ளது.
இந்நிலையில், ரியல் மாட்ரிட் அணியின் ஸ்ட்ரைக்கர் மரியானோ டியாஸிற்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியல் மாட்ரிட் அணியின் மருத்துவ குழு நேற்று (ஜூலை 27) வீரர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் அவர் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் ரியல்மாட்ரிட் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் இவர் பங்கேற்பது கடினம் என தெரிகிறது.
முன்னதாக நாக் அவுட் போட்டியின் முதல் சுற்றில் ரியல் மாட்ரிட் அணி 1-2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியிடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.