ஸ்பெயினின் லாலிகா கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் கால்பந்துலகின் மிகவும் பிரபலமான அணி. ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் தொடரை இதுவரை 13 முறை வென்ற அணி என்ற சாதனையையும் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் கோப்பையை ருசித்த ஒரே அணி என்ற வரலாற்றையும் படைத்து மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது.
ஆனால், தற்போதைய ரியல் மாட்ரிட்டின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த ஆண்டு ரஷியாவில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றப் பின், ஒன்பது ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிவந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, யுவென்டஸ் (இத்தாலி) அணிக்கு விளையாட ஒப்பந்தமானார்.
ரொனால்டோ சென்ற பிறகு, அவரது இடத்தை ரியல் மாட்ரிட் அணியில் எந்த வீரர்களாலும் நிரப்ப முடியவில்லை. அதேசமயம், ரியல் மாட்ரிட் அணியின் ஆட்டமும் வேகத்தை இழந்தது. இதன் விளைவாக, அந்த அணி லாலிகா கால்பந்து தொடரில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் தொடரில் தங்களது சொந்த மண்ணில் அயாக்ஸ் அணியிடம் நாக்-அவுட் சுற்றில் ரியல் மாட்ரிட் தோல்வி அடைந்தது.
பல்வேறு பயிற்சியாளர்களை அந்த அணி நிர்வாகம் நீக்கிய பின், மீண்டும் ஜிடேனை பயிற்சியாளராக நியமித்தது. ரியல் மாட்ரிட் அணி ஜிடேன் தலைமையின் கீழ்தான் ஹாட்ரிக் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது.
இதையடுத்து, இந்த சீசனில் செல்சி அணியின் ஸ்ட்ரைக்கர் ஈடன் ஹசார்ட்டை அந்த அணி விலைக்கு வாங்கியது. அதுமட்டுமில்லாமல், பேயர்ன் முனிச்சில் விளையாடிய ஹெமஸ் ராட்ரிகஸ் மீண்டும் ரியல் மாட்ரிட் அணியில் சேர்ந்தார். இதனால், ரியல் மாட்ரிட் அணி மீண்டும் பழைய வின்னிங் ஃபார்முக்கு திரும்பும் என அந்த அணியின் ரசிகர்கள் நினைத்தனர்.
இந்நிலையில், ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் குரூப் ஏ பிரிவு போட்டியில் ரியல் மாட்ரிட் - பாரிஸ் செயின்ட் ஜெர்மன் (பி.எஸ்.ஜி.) அணிகள் மோதின. காயம் காரணமாக எம்பாப்பே, கவானி ஆகியோர் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியில் இடம்பெறவில்லை. இதனால், நிச்சயம் ரியல் மாட்ரிட் அணி வெற்றியுடன் சாம்பியன்ஸ் லீக் தொடரை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியின் மிடில் ஃபீல்டர் டி மரியா, லெஃப் விங் பொசிஷனில் விளையாடி இரண்டு கோல்களை அடித்தார். ரியல் மாட்ரிட் அணியும் பந்தை லாங் பாஸ், க்ராஸ் செய்த போதிலும் பி.எஸ்.ஜி. தடுப்பாட்டக்காரர்களைத் (டிபெண்டர்ஸ்) தாண்டி அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.
இதனிடையே, ரியல் மாட்ரிட் வீரர் கரேத் பேல் அற்புதமாக கோலடிக்க அந்த கோலானது, வார் (Video Assistant Refree) முறையால் ரத்தானது. இரண்டாம் பாதியில் ரியல் மாட்ரிட் அணி ஹசார்ட், பேல், ராட்ரிகஸ் ஆகியோருக்குப் பதிலாக லுகாஸ் வாஸ்கெஸ், வினிசியஸ் ஜூனியர், லுகா ஜோவிக் ஆகியோரை சப்ஸ்ட்டியூட் வீரர்களாக களமிறக்கியும் அவர்களுக்கு பலன் தரவில்லை.
பின்னர், ஆட்டம் முடியும் நேரத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பி.எஸ்.ஜி. மற்றொரு ஷாக் தந்தது. பி.எஸ்.ஜி. வீரர் தாமஸ் முனிர் தன்பங்கிற்கு ஒரு கோல் அடித்ததால், ஆட்டநேர முடிவில் அந்த அணி 3-0 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது. இறுதிவரை ரியல் மாட்ரிட் அணி கோல் கம்பத்தை நோக்கி ஒரு ஷாட் அடிக்க அடிக்கமாட்டார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ரியல் மாட்ரிட் தற்போது பரிதாப நிலையில் உள்ளது.