இங்கிலாந்தில் உள்ள கால்பந்து கிளஃப்களுக்கிடையே நடத்தப்படும் பிரீமியர் லீக் தொடர் உலக அளவில் பிரபலமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற போட்டியில் பலம் வாய்ந்த மான்செஸ்டர் யுனைடெட் அணி செல்சி அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியின் 18ஆவது நிமிடத்திலேயே மான்செஸ்டர் வீரர் மார்க்கஸ் ராஷ்போர்டு பெனால்டி முறையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அற்புதமாக கோலாக மாற்றினார். அதைத் தொடர்ந்து செல்சி அணி வீரர்கள் கடுமையாக டிபென்ட் செய்யத் தொடங்கினார். பின்னர் முதல் பாதியின் இறுதியில் 1-0 என மான்செஸ்டர் அணி முன்னிலை வகித்தது.
அதன்பின்னர் தொடங்கிய இரண்டாவது பாதியில் யுனைடட் வீரர்கள் அந்தோணி மார்சியல் 65ஆவது நிமிடத்திலும், மார்க்கஸ் ராஷ்போர்டு 67ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து அமர்களப்படுத்தினர். பின்னர் மீண்டும் 81ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஜேம்ஸ் கோல் அடித்தார்.
இறுதிவரை செல்சி அணி கோல் ஏதும் அடிக்காததால், மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மான்செஸ்டர் அணி தனது கணக்கை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.