ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் வீரர்கள் பல்வேறு அணிகளில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர்.
அதில் இந்திய அணியின் டிஃபென்டர் அதில் கான் ஹைதராபாத் அணிக்காகவும், கோல் கீப்பர் குர்பிரீத் சிங் பெங்களூரு அணிக்காகவும், டிஃபென்டர் சந்தேஷ் ஜிங்கான் ஏடிகே மோகன் பாகன் அணிக்காவும் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதில் கான் தனது சக இந்திய அணி வீரர்கள் குறித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அதில் கான், “குர்பிரீத், சந்தேஷ் போன்ற அணியினருடன் தேசிய அணியில் விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அனைவரும் ஐ.எஸ்.எல் தொடரின் ஒரே அணியில் ஒன்றாக விளையாட முடியவில்லை. ஆனால் நாங்கள் தேசிய அணியின் தடுப்புச்சுவராக உள்ளோம் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.
அதிலும் சந்தேஷ் ஜங்வானுடன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போதெல்லாம் நான் ஆட்டத்தில் தவறு செய்கிறோனே, அப்போதெல்லாம் அவர் எனக்கு உதவுவார். அதன் காரணமாகவே நான் அவருடன் பல போட்டிகளில் ஒன்றாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன்.
அதேபோல் தான் கோல் கீப்பர் குர்பிரீத் சிங். கத்தார் அணிக்கு எதிராக நாங்கள் விளையாடும் போது அவரின் அபார திறமையால், எங்கள் அணியை தோல்வியிலிருந்து மீட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த கோல் கீப்பர்களுள் அவரும் ஒருவராக திகழ்கிறார்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:முஷ்டாக் அலி தொடரில் யுவராஜ் சிங்?