2016ஆம் ஆண்டு சென்னை எஃப்சி அணியில் களமிறக்கப்பட்ட இளம் வீரரான ஜெரி லாரின்ஸூவாலா, சிறந்த தடுப்பாட்ட வீரராக ஜொலித்தார். இதுவரை 57 போட்டிகள் சென்னை அணிக்காக விளையாடியுள்ள அவர், 2017-18 சீசனில் அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்களிப்பை அளித்தார். அதே ஆண்டில் எஃபிசி கோவா அணிக்கு எதிராக கோல் அடித்த இவர், தொடரில் கோல் அடித்த இளம் வீரர் என்று பெருமையும் பெற்றார்.
இதைத்தொடர்ந்து இவரது ஒப்பந்தந்த்தை மேலும் இரண்டு ஆண்டுகள் சென்னை எஃப்சி அணி நீட்டித்துள்ளது. இதுகுறித்து ஜெரி லாரின்ஸூவாலா கூறியதாவது:
சென்னைக்காக விளையாடிய கடந்த சீசன் போட்டிகள் அனைத்தும் மறக்க முடியாதவையாக அமைந்திருந்த நிலையில், மீண்டும் எனது ஒப்பந்தம் அணியில் நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை கால்பந்து கிளப்பில் இருக்கும் வீரர்களுடன் சிறந்த கற்றல் அனுபவமாக எனது பயணம் இதுவரை அமைந்துள்ளது. இதன்மூலம் சிறந்த கால்பந்து வீரராக என்னை இன்று மாற்றியமைத்துள்ளேன்.
மறுபடியும் சென்னை அணியின் ஜெர்சியை அணிய இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன். அத்துடன் வெறித்தனமான ரசிகர்களுக்காக தொடர்ந்து களத்தில் போராடவுள்ளேன் என்றார்.
22 வயதாகும் ஜெரி லாரின்ஸூவாலா 2017ஆம் ஆண்டு நேபாளம் அணிக்கெதிரான நட்பு ரீதியான போட்டியில் இந்தியா சீனியர் அணியில் அறிமுகமாகி விளையாடினார்.
இதையும் படிங்க: ரியல் மாட்ரிட் வீரருக்கு கரோனா!