ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியுடன் மோதியது.
இப்போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தியது. இப்போட்டியின்போது ஆட்ட விதிகளை மீறி எதிரணி வீரரைத் தாக்கிய காரணத்திற்காக மும்பை அணி வீரர் அஹ்மத் ஜஹூவிற்கு, நேரடியாக ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதனையடுத்த அஹ்மத் ஜஹூவிற்கு அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் ஒழுங்காற்றுக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஐஎஸ்எல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐஎஸ்எல் தொடரில் மும்பை சிட்டி எஃப்சி - நார்த் ஈஸ்ட் எஃப்சி அணிகள் மோதிய இரண்டாவது லீக் ஆட்டத்தின்போது, மும்பை சிட்டி எஃப்சி மிட்ஃபீல்டர் அஹ்மத் ஜஹூ ஆட்ட விதிகளை மீறிய குற்றத்திற்காக நேரடி ரெட் கார்டு வழங்கப்பட்டது. இச்சம்பவத்தை அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் ஒழுங்காற்றுக் குழு விசாரித்தது.
இந்த விசாரணையின் முடிவில் மும்பை அணியின் அஹ்மத் ஜஹூ மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் ஒழுங்குமுறை விதிகளின்படி அவர் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:”ரோஹித், கோலி இல்லாதது அணியில் வெற்றிடத்தை உருவாக்கும்” - ஸ்டீவ் ஸ்மித்