2020ஆம் ஆண்டில் டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ளது. ஆசியக்கண்டத்தில் இருந்து இந்தப்போட்டியில் பங்கேற்கும் மகளிர் அணிகளுக்கான கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இதன் இரண்டாவது தகுதிச் சுற்றில் இந்திய அணி, இந்தோனேஷியா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி பலமுறை கோல் அடிக்க முயற்சி மேற்கொண்டுவந்தனர். இதன் பலனாக, ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை கிரேஸ் தங்மாய், இந்தோனேஷிய அணியின் தடுப்பு வீராங்கனைகளை கடந்து அசத்தலான கோல் அடித்தார்.
இதனால், முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியிலும் இந்திய அணி சிறப்பாக ஆடியது. மீண்டும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரேஸ் தங்மாய் ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்து மிரட்டினார். இறுதியில் இந்திய மகளிர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி, டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு கனிந்துள்ளது. இந்திய மகளிர் அணி அடுத்து நேபாளத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.