ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்கள் பெரும் சேதங்களை சந்தித்துள்ளன. இதுவரை இந்த புயலுக்கு 80 பேர் உயிரிழந்த நிலையில், பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் மீளமுடியாத பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இவர்களுக்கு உதவும் வகையில் 38 கால்பந்து வீரர்கள் கூட்டாக இணைந்து 'Players For Humanity' என்ற கூட்டமைப்பைத் தொடங்கி உதவுவதற்கு முன்வந்துள்ளனர்.
இதில் சுப்தரா பவுல், மெஹ்டப் ஹொசைன், அர்ணாப் மொண்டல், சுவாஷிஷ் ராய் சவுத்ரி, சந்தீப் நாண்டி, பிரனாய் ஹால்டர், பிரீதம் கோட்டல், ஷவ்விக் கோஷ் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இதுகுறித்து இந்திய கால்பந்து சம்மேளம் சார்பாக, ''கால்பந்து போட்டிகளின் உயிர்நாடி ரசிகர்களின் அன்பில் தான் உள்ளது. அந்த அன்பை ரசிகர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். கடினமான சூழல்களில் ஒருவருக்கு ஒருவர் உதவுவதே வாழ்க்கை. அதுதான் மனிதம். இதற்கு அனைவரும் முன்வர வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளது.
இதைப்பற்றி வீரர்களின் சார்பாக பிரனாய் ஹால்டர் பேசுகையில், ''ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வீரர்கள் பயணம் செய்யவுள்ளோம். மக்களின் தேவைகளை அறிந்து உதவ உள்ளோம். சிலர் வீடுகளை இழந்துள்ளனர். பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வருமானமின்றி மக்கள் தவித்து வருகின்றனர். எவ்வளவு மக்களுக்கு உதவி செய்ய முடியுமோ செய்வோம்.
கால்பந்து வீரர்களாக சமூகத்திலிருந்து அதிகமான அன்பைப் பெற்றுள்ளோம். அதனால்தான் கூட்டாக இணைந்து உதவ முன்வந்துள்ளோம். சுந்தர்பன்ஸ், காக்தீப், மிட்னாபூர் பகுதிகள் பெரும் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு முதலில் உதவி செய்யவுள்ளோம். வீடுகளை இழந்தவர்களுக்கு உதவுவதே முதன்மையாக இருக்கும். அவர்கள் மீண்டும் வீடு கட்டுவதற்கு என்ன மாதிரியான தேவை உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கான உபகரணங்களை வழங்குவோம்.
கரோனா வைரசை எதிர்த்து போராடிய சூழலில் ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தில் இன்னும் அதிக சேதங்களை ஏற்படுத்திவிட்டது. இதனால் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு அனைவரும் முன்வர வேண்டும்'' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்னை நினைவுப்படுத்திய லாரா மகன் - சச்சின் பகிர்ந்த நாஸ்டால்ஜியா புகைப்படம்