2010ஆம் ஆண்டு முதல் கால்பந்து விளையாட்டில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு துபாய் டி’ ஓர் எனப்படும் குளோப் சாக்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், அணிகளைத் தேர்வுசெய்து விருது வழங்குவது வழக்கம்.
அதன்படின் இந்தாண்டிற்கான குளோப் சாக்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை போலந்து நாட்டின் நட்சத்திர வீரர் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கிக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பெற்றபின் பேசிய லெவாண்டோவ்ஸ்கி, “நான் ரசிகர்களுக்கு முன்னால் பெரிய மைதானங்களில் விளையாட வேண்டும், பல விருதுகளைப் பெற வேண்டும் என கனவு கண்டேன். தற்போது எனது கனவும் நனவாகிவிட்டது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விருதுக்காக எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும் ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோருக்கு மத்தியில் நான் இந்த விருதைப் பெறுவது சிறப்பு வாய்ந்த ஒன்று. மீண்டும் உங்களை அடுத்த ஆண்டும் சந்திப்பேன் என நினைக்கிறேன் நன்றிகள்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து துபாய் டி ஓரின் நூற்றாண்டின் சிறந்த வீரருக்கான விருது கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டது. விருதுபெற்ற பின் பேசிய ரொனால்டோ, “இந்த விருது கிடைத்திருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் எப்போதும் கூறுவதுபோல எனது வாழ்க்கையின் உத்வேகமாக கால்பந்து உள்ளது.
அதன் பலனாகவே இன்று எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அதிலும் தலைசிறந்த கால்பந்து வீரர்களுக்கு மத்தியில் எனக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகப்பெரும் மரியாதை” என்று தெரிவித்தார்.
மேலும் இந்தாண்டின் சிறந்த கால்பந்து அணியாக பெயர்ன் முனிச்சும், நூற்றாண்டின் சிறந்த அணியாக ரியல் மாட்ரிட்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாகிஸ்ங் டே டெஸ்ட்: டூ பிளெசிஸ், பவுமா நிதான ஆட்டம்!