யுஇஎஃப்ஏ-இன் (ஐரோப்பிய யுனியன் கால்பந்து சங்கம்) செயற்குழு கூட்டம் ஜூன் 17ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் தள்ளிப்போடப்பட்டுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான இறுதிப்போட்டி நடத்தப்படும் இடம் முடிவு செய்யப்படும். இந்தப் போட்டி நடைபெறும் நாட்டில்தான் காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
மார்ச் மாதம் நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் கரோனா வைரஸ் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது கரோனா பீதியால் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வீரர்கள், ரசிகர்களுக்கு ஏற்றவாறு மைதானங்கள், இதர தேவைகளை தேர்வு செய்யும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இந்த சூழ்நிலையில், போர்ச்சுகல் நாட்டின் ஜனாதிபதி மர்செலே ரீபேலா டி செளசா, கால்பந்து விளையாட்டை பிரியமாக கொண்ட தேசத்தினருக்கு ஆகஸ்டில் நற்செய்தி காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் போர்ச்சுகலிலுள்ள பென்ஃபிகா, லிஸ்பான் என இரண்டு மைதானங்களில் ஒன்றில் இறுதிப்போட்டி நடைபெறலாம் என பேசப்படுகிறது.
இதேபோல் ஜெர்மனியிலுள்ள ஃபிராங்பர்ட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஜெர்மனி செய்தித்தாள்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணைபடி துருக்கி நாட்டிலுள்ள இஸ்தான்புல் நகரில் கடந்த சனிக்கிழமை இறுதிப்போட்டி நடைபெற்றிருக்க வேண்டும்.
இதையடுத்து இங்கிருந்து இறுதிப்போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது போர்ரச்சுகல் மற்றம் ஜெர்மனி இடையே கடும் போட்டி நிலவுகிறது.