இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஃபிபாவால் யு17 மகளிருக்கான உலகக் கோப்பை தொடர் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இதன் ஏழாவது உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் நவம்பர் 2ஆம் தேதி முதல் 21ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்திய அணி இந்த தொடரில் நேரடியாக பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளது.
இந்திய அணி இந்தத் தொடரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 32 போட்டிகள் நடைபெறுவுள்ளன. இந்நிலையில், இத்தொடருக்கான போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.
அதில், அகமதாபாத், புபனேஷ்வர், கவுகாத்தி, கொல்கத்தா, நவி மும்பை ஆகிய ஐந்து நகரங்களில் இந்த தொடரின் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நவி மும்பையைத் தவிர மற்ற நான்கு நகரங்களிலும் லீக் சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்பின் புபனேஷ்வரைத் தவிர்த்து மற்ற நான்கு நகரங்களில் நாக் அவுட், காலிறுதி, அரையிறுதி போட்டிகள் நடைபெறுகின்றன.
காலிறுதி போட்டிகள் நவம்பர் 12, 13ஆம் தேதியும், அரையிறுதி போட்டி 17ஆம் தேதியும் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து, தொடரின் இறுதி போட்டி வரும் நவம்பர் 21ஆம் தேதி நவி மும்பையில் உள்ள டி.ஒய். படில் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2017இல் ஆடவர் யு17 உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாக் அவுட் போட்டியில் நடப்பு சாம்பியன் லிவர்பூலை வீழ்த்திய அத்லெடிக்கோ மாட்ரிட்!