கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ. 35 வயதான இவர் இத்தாலியின் யுவென்டஸ் அணிக்காக விளையாடிவருகிறார்.
கடந்த ஒரு வருடத்தில் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. அதில் 105 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்து ரொனால்டோ அசத்தினார்.
இந்நிலையில், தனது விளையாட்டு பயணத்தில் ஒரு பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ. 7500 கோடி) வருவாய் ஈட்டிய முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி டைகர் வுட்ஸ் (கோல்ஃப்), ஃபிளாயிட் மேவெதர் (தொழில்முறை குத்துச்சண்டை) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தனது 17 வருட விளையாட்டு பயணத்தில் ரொனால்டோ இதுவரை ஊதியமாக 650 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளார். தற்போதைய ஒப்பந்தத்தின்படி ஜூன் 2022இல் இவரது வருமானம் 765 மில்லியன் டாலராக உயரும்.
இவரது போட்டியாளராக பார்க்கப்படும் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, தனது 15 ஆண்டுகால விளையாடி பயணத்தில் 605 மில்லியன் டாலரை வருமானமாகப் பெற்றுள்ளார்.