உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருந்தது. இருப்பினும் கரோனா பரவல் காரணமாக அவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.
கரோனாவுக்குப் பின் தற்போது மெல்ல இயல்பு வாழ்கை திரும்பிவரும் சூழலில், உலகக் கோப்பைத் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று (அக்.08) தென் அமெரிக்க கண்டத்திற்கான தகுதித் சுற்றில் மூன்று போட்டிகள் நடைபெற்றன.
ஈஃகுவேடார் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி வெற்றிக்கான கோலை அடித்தார்.
அதேபோல் சிலி அணிக்கு எதிரான ஆட்டத்தில் உருகுவே கடைசி நிமிட கோல் காரணமாக 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. பராகுவே மற்றும் பெரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற மற்றொரு தகுதிச்சுற்று ஆட்டம் 2-2 என்று சமனில் நிறைவடைந்தது.
கரோனா பரவல் காரணமாக இந்தப் போட்டிகள் நடைபெற்ற மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அடுத்தகட்ட தகுதிச் சுற்று போட்டிகள் வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளன.