2020- 21ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள கால்பந்து போட்டிகளில் பங்கேற்க தேசிய உரிமம் கட்டாயமாகும். ஆனால், அதை தவறவிட்ட 5 ஐஎஸ்எல் அணிகளால், இந்தாண்டு நடைபெறும் தேசிய கால்பந்து போட்டிகளில் பங்கேற்க முடியாது என அகில இந்திய கால்பந்து பெடரேஷன் (ஏ.ஐ.எஃப்.எஃப்) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏ.ஐ.எஃப்.எஃப். வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020-21ஆம் ஆண்டுக்கான தேசிய உரிமத்தைப் பெறத் தவறிய எஸ்சி கிழக்கு வங்கம், ஒடிசா எஃப்சி, ஹைதராபாத் எஃப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி ஆகிய 5 கிளப்புகளும் 2020-21 பருவத்தின் தேசிய கிளப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி கிடையாது.
சீக்கிரம் திருத்தங்களைச் செய்யும்படி கிளப்களைக் குழு கேட்டுள்ளது. மேலும், இப்பிரச்னை தொடர்பாக எந்த ஒரு கிளப்பும் மேல்முறையீடு செய்யவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தனர்
முன்னதாக, ஐந்து ஐ.எஸ்.எல் கிளப்புகள் 2020-21 பருவத்திற்கான AFC மற்றும் தேசிய உரிமங்களைப் பெற்றது. இந்த சீசனுக்காக மொத்தம் 19 கிளப்புகள் தேசிய மற்றும் ஏஎஃப்சி கிளப் உரிமங்களுக்கு விண்ணப்பித்துள்ளன, அவற்றில் 8 கிளப்புகள் ஐ-லீக் மற்றும் 11 ஐ.எஸ்.எல். கிளப்புகள் ஆகும்.