சென்னை: இந்திய அணி இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி, கடைசி நேரத்தில் கோட்டை விட்டது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தமே. இருப்பினும், இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு நிறைய இளம் சொத்துக்கள் கிடைத்துள்ளது.
இளம் வீரர்களின் வருகை: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்றவர்கள் தங்களது திறமைகளை அபாரமாக வெளிப்படுத்தினர். குறிப்பாக, ரிங்கு சிங்கின் வாழ்க்கையையே 2023ஆம் ஆண்டு புரட்டி போட்டது என்று சொல்லலாம். 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவையாக இருந்தது.
முதல் பந்தை பேட்டிங் அனுபவம் இல்லாத உமேஷ் யாதவ்தான் சந்தித்தார். இருப்பினும், எப்படியோ ஒரு ரன் எடுத்தார். 5 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க வேண்டும், இவர் எங்கே அடிக்கப் போகிறார் என அனைவரும் நினைத்த நேரத்தில், அதனை நிகழ்த்தி கொல்கத்தா அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார், ரிங்கு சிங். அந்த தொடர் முழுக்க ஐந்தாம் வரிசைக்கு மேல் களம் இறங்கிய ரிங்கு சிங், 16 போட்டிகளில் 474 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அதன்பின், நேரடியாக இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார். இந்திய அணியிலும் ஒரு சில போட்டிகளைத் தவிர்த்து, மற்ற போட்டிகளில் அணிக்குத் தேவையான ரன்களை எடுத்து கொடுத்து, அணியின் வெற்றிக்கு பங்காற்றினார். அடுத்ததாக இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமான அவர், சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2024 ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வாவதற்கு, தற்போது அவர் கடும் போட்டியாளராக மாறியுள்ளார்.
இதைப் போன்று யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். மேலும் ஆவேஷ் கான், ரவி பிஸ்னோய், முகேஷ் குமார் போன்ற பந்து வீச்சாளர்களும் அசத்தி வருகின்றனர். இப்படி இந்திய அணியில் ஏராளமான இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். ஐபிஎல் தொடர் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு தேர்வானதன் மூலம், இந்திய அணியின் எதிர்காலத்தை பிரகாசமாக்கியுள்ளனர்.
அதிக ரன்கள் விளாசிய சுப்மன் கில்: இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில்லுக்கு, இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாகவே மாறியுள்ளது. அவர் இந்த ஆண்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் பட்டியலில் முதல் இடம் வகித்துள்ளார். 50 இன்னிங்ஸ் ஆடிய இவர் 1 இரட்டை சதம், 7 சதங்கள், 10 அரைசதங்கள் உள்பட மொத்தம் 2,126 ரன்கள் குவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய வீரராக 3வது இடத்தில் விராட் கோலி உள்ளார். அவர் 34 இன்னிங்ஸில் 8 சதங்கள், 9 அரைசதங்கள் உள்பட மொத்தம் 1,934 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார்.
இந்த ஆண்டில் புதிய சாதனை படைத்த முன்னணி வீரர்கள்: 2023ஆம் ஆண்டில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள், கூட்டாக 19 ஒருநாள் சதங்களை விளாசியுள்ளனர். இதுவே, இந்த ஆண்டின் ஒரு அணியால் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச சதங்களாகும். குறிப்பாக, விராட் கோலி மட்டும் 8 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தனது 50வது ஒருநாள் சதம் மூலம் உடைத்தெரிந்தார், கோலி.
ஐசிசி தரவரிசையில் முதல் இடம்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தாலும், அதே ஆஸ்திரேலியா அணியிடம் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்தது. ஏற்கனவே, மற்ற இரண்டு ஃபார்மெட்டிலும் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி, தற்போது வரை அனைத்து வகையான ஃபார்மெட்டிலும் முதல் இடம் வகித்து வருகின்றது.
2024 இந்திய அணிக்கு சிறப்பாக அமையுமா? கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது, இந்திய அணி ஐசிசி கோப்பையைக் கைபற்றி. நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அது நடக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப இந்திய அணியும் உலகக் கோப்பையில் அசத்தலான ஆட்டத்தை வெளிபடுத்தியே, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் சமீபத்தில் ரோகித் கூறியது போல, "நாங்கள் தொடர் முழுக்க சிறப்பாக விளையாடி வந்தோம். ஆனால், இறுதிப் போட்டியில் சில விஷயங்களை செய்யத் தவறினோம்" என்றார்.
ஆம் இந்தியாவின் கனவை தகர்த்தெறிந்தது, ஆஸ்திரேலிய அணி. இருப்பினும் இந்திய அணி அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது. இதுவரை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. பல முன்னணி வீரர்கள் முயன்றும், அது சாத்தியப்படவில்லை. ரோகித், கோலி போன்றவர்களால் இதை செய்ய முடியுமா என்ற கேள்வி அவர்கள் முன் இப்போது உள்ளது.
மேலும், இந்திய அணி இந்த ஆண்டு விட்டதை, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் நிகழ்த்த நினைக்கும். அதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்து, இந்திய அணீ 2024ஆம் ஆண்டை வரலாற்றுச் சாதனையுடன் தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: "எல்லா உயிர்களும் சமம் எனச் செல்வது ஒன்றும் ஆபத்தான கருத்து இல்லை" - கவாஜாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கம்மின்ஸ்!