ஹராரே: ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதம் உள்ள இரண்டு இடத்திற்கு தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் வைத்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற சூப்பர் 6 பேட்டியில் ஸ்காட்லாந்து , வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முந்தைய போட்டிகளில் சரியாக விளையாடாத வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தப் போட்டியில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் தான் உலகக் கோப்பை பிரதான சுற்றுக்கான போட்டிகளைத் தக்க வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பெளலிங்கைத் தேர்வு செய்தது.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் தேர்வு குழு உறுப்பினர்களுக்கு இவ்வளவு சம்பளமா? இதில் சம்பள உயர்வு வேறையா?
அதன்பின் முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேய்சன் ஹோல்டர் 79 பந்துகளில் 1 சிக்ஸ், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், ஷெப்பர்டு 43 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 36 ரன்களும், நிக்கோலஸ் பூரான் 43 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களும் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து தனது வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் இறங்கிய கிறிஸ்டோபர் தான் எதிர் கொண்ட முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதன் பின் களம் இறங்கிய மெக்முல்லன், முதலில் இறங்கிய கிராஸ் உடனான பாட்னர்ஷிப் அணியின் வெற்றியை உறுதி செய்தது. மெக்முல்லன் 106 பந்துகளில் 1 சிக்ஸ், 8 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிராஸ் 107 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேலும், இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகப் பதிவு செய்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மீதம் இருக்கிறது. அதில் வெற்றி பெற்றாலும், 4 புள்ளிகள் மட்டுமே பெறும். ஆனால் அதற்கு மேல் 6 புள்ளிகளுடன் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஐசிசி உலகக் கோப்பையில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது.
கடந்த சீசனில் தகுதி சுற்று மூலம் நுழைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசிக்கு முந்தைய இடமான 9வது இடத்தில் போட்டியை நிறைவு செய்தது. மேலும், இந்த அணியானது 1975 மற்றும் 1979 ஆகிய இரு சீசனில் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Neeraj Chopra: டைமண்ட் லீக் தடகள போட்டியில் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா!