டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே டி20 தொடரை சமன் செய்த இந்திய அணி, அதனைத் தொடர்ந்து நேற்று (டிச.21) முடிவடைந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்காக இந்திய வீரர் விராட் கோலி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா சென்று பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், தனது குடும்ப சூழல் காரணமாக விராட் கோலி இந்தியாவுக்கு திரும்புகிறார். இருப்பினும், அவர் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன் அணிக்கு மீண்டும் திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இத்தொடரிலிருந்து இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஒருநாள் தொடரின் 2வது போட்டியின்போது கை விரலில் காயம் ஏற்பட்டதால், நேற்று (டிச.21) நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.
அதனால் இந்த காயத்தில் இருந்து குணமடைய அதிக நாட்கள் ஆகும் என்பதால், இத்தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முழங்கால் காயத்தால் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 - 2025 சுழற்சியின் ஒரு பகுதியாகும். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சுழற்சியின்போது, விராட் கோலி 30 இன்னிங்ஸ்களில் 932 ரன்களை குவித்தார். குறிப்பாக, இந்த 2023- 2025 சுழற்சியின் தொடக்கத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் அரைசதம் அடித்துள்ளார். மேலும், 1992ஆம் ஆண்டு முதல் இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க: Ind Vs SA: சஞ்சு சாம்சன் கன்னி சதம்! இந்திய அணியின் வெற்றிக்கு இதுவும் காரணமா?