ஐதராபாத் : 13வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரோலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன. இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்களும் அதில் வெற்றி பெற்றும் புள்ளி பட்டியலில் முதன்மை பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுகளுக்கும் தகுதி பெறும்.
முதல் முறையாக இந்தியாவில் மட்டும் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் தரமான சம்பவங்களுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதலாவது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.
உலக கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட நிமிடங்களில் விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில், பலர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியிடம் டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், யாரும் தன்னிடம் டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என விராட் கோலி கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளைக் கேட்டு தயவுசெய்து என்னை நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தப் பதிவை பகிர்ந்து, "உங்களின் குறுஞ்செய்திக்கு பதில் வரவில்லை என்றால் என்னிடம் உதவி கேட்காதீர்கள்" என்றும் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற உள்ள நிலையில் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஆகஸ்ட் இறுதியில் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களில் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டன.
இதையும் படிங்க : World Cup Cricket 2023: நாக் அவுட் சுற்றில் தடுமாற்றம்.. அவசரமா? பதற்றமா?! தொடரும் சஞ்சு சாம்சன் சர்ச்சை! - சடகோபன் ரமேஷ் கூறுவது என்ன?