உலகக்கோப்பை டி20 ’சூப்பர் 12’ சுற்றுப்போட்டியில் இன்று இந்தியா, வங்கதேசத்தை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கினை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராத் கோலி 64 ரன்களும், ராகுல் 50 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கில் வங்கதேச அணியின் ஹசன் மேமுத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வங்கதேச அணி 7 ஓவருக்கு 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போட்டியில் மழைக்குறுக்கிட்டது. பின்னர் மழை நின்ற பிறகு, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச அணிக்கு 16 ஓவர்களில் 151 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ராகுலின் அபாரமான த்ரோவில், லிட்டன் தாஸ் 60 ரன்களில் ரன் அவுட்டானார். ஷமி வீசிய பந்தில் நஞ்மல் ஹோசைன் 21 ரன்களில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷகிப், அபிப் ஆகியோரை அர்ஷ்தீப் வெளியேற்றினார்.
பின்னர் களமிறங்கிய நூருல் ஹசன், டஸ்கின் அஹமது ஆகியோர் இலக்கை நோக்கி அதிரடியாக ஆடினர். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணியின் அர்ஷ்தீப் பந்துவீசினார். முதல் பந்தில் 1 ரன் அடித்த நிலையில் 2ஆவது பந்தில் சிக்ஸர் பறந்தது.
கடைசி 2 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,முதலில் நூருல் ஹசன் பவுண்டரி அடித்தார். கடைசிப்பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நூருல் ஹசன் நேராக அடித்து 1 ரன் மட்டுமே எடுக்க, இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதையும் படிங்க: கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான பார்முலா கார் பந்தயம்