துபாய் : ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியன் இலங்கை அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஒருகட்டத்தில் அந்த அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் பனுகா ராஜபக்சா, ஹசரங்கா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பனுகா ராஜபக்ச 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிப் ரவுப் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. இலங்கை அணி வீரர்கள் பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் தாக்குப் பிடித்து 55 ரன்னில் அவுட்டானார். இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றியது.
இதையும் படிங்க : "விராட் கோலி என்னை விட திறமையானவர்" - சவுரவ் கங்குலி