மகாராஷ்டிரா : மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு வரும் நவம்பர் 1ஆம் தேதி சிலை திறக்கப்பட உள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கடந்த ஏப்ரல் மாதம் 50வது பிறந்த நாளை கொண்டாடினார். 50 வயதான சச்சின் தெண்டுலகரின் சாதனைகளை கவுரவிக்கும் வகையிலும், காலத்திற்கும் அவரை நினைவு கூரவும் மும்பை வான்கடே மைதானத்தில் அவரது ஆளுயர சிலை நிறுவப்பட உள்ளது.
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் சச்சின் தெண்டுல்கரின் சிலை நிறுவத் திட்டமிட்டு உள்ளது. வரும் நவம்பர் 1ஆம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் இந்தியா - இலங்கை ஆட்டத்திற்கு முன்னதாக இந்த சிலை திறப்பு விழாவை நடத்த மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளது.
இந்த விழாவில் இரு அணி வீரர்கள், அணி நிர்வாகம், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள ஸ்டாண்டுக்கு சச்சின் தெண்டுல்கர் பெயர் வைக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த ஸ்டாண்டின் அருகில் இந்த சிலையை நிறுவ மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை வான்கடே மைதானம் சச்சின் தெண்டுல்கரின் விருப்ப மைதானம் என்பதை தாண்டி பல்வேறு சாதனைகளை இந்த மைதானத்தில் சச்சின் தெண்டுல்கர் செய்து உள்ளார். இந்த சிலை திறப்பு விழாவில் சச்சின் தெண்டுல்கர் கலந்து கொள்ள உள்ளதாக மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் தெரிவித்து உள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு இதே வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதையும் படிங்க : Pakistan VS Australia : ஆஸ்திரேலியா அதிரடி! பாகிஸ்தான் திணறல்!