முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டி ஒன்றில், ரோகித் சர்மாவின் வயது மற்றும் பணிச்சுமைகளை பிசிசிஐ கருத்தில்கொண்டால், அவரை டி-20 கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விடுவிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் பணிச்சுமை குறைந்து, அவரால் சிறப்பாக விளையாட முடியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதற்கு மற்ற நாட்டு அணிகளை உதாரணமாக கூறலாம். 1997ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இது போன்ற சிக்கல்களை கருத்தில் கொண்டு ஸ்டீவ் வாக்கை ஒரு நாள் அணியின் கேப்டனாகவும், மார்க் டெய்லரை டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்வார் எனவும் அறிவித்தது. அப்போது அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.
சில ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்தும் இந்த நடைமுறையை செயல்படுத்தியது. ஒரு நாள் அணிக்கு கேப்டனாக மோர்கனும், டெஸ்ட் அணிக்கு கேப்டனாக ஜோ ரூட்டும் அறிவிக்கப்பட்டனர். இதன் பலனாக 2019இல் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றது.
மேலும் அணி நிர்வாகம் மூன்று வடிவிலான கிரிக்கெட்டுக்கும் , ஒருத்தரே கேப்டனாக தொடர வேண்டும் என விரும்பினால் அது ரோகித் சர்மாவாகவே இருக்கட்டும், கேப்டனை மாற்ற வேண்டிய அவசியமில்லை; தான் ரோகித் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக ஷேவாக் கூறினார்.
இதையும் படிங்க: டி-20 உலகக்கோப்பைக்குப்பின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!