சென்னை: நடப்பாண்டு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக, 10 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் வந்த இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்திய ரசிகர்களில் மனதை கிழித்து எரிந்தது. இதன் பின்னர், இந்திய அணியின் தோல்வி குறித்து பலர் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கருத்துகளை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில், இது குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்திய அணி தோல்வியை சந்தித்த போது நாங்கள் வலியை உணர்ந்தோம். ரோகித் மற்றும் விராட் அழுது கொண்டிருந்தனர். இருப்பினும் இந்திய அணி ஒரு அனுபவம் வாய்ந்த அணியாகும். வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்.
இந்திய கிரிக்கெட் அணி என்றால் எம்.எஸ் தோனி சிறந்த கேப்டன் என்பார்கள். ஆனால் ரோகித் சர்மாவும் சிறந்த நபர்தான். அணியில் உள்ள ஒவ்வொறு வீரரையும் ரோகித் சர்மா புரிந்து கொள்ளக்கூடியவர். வீரர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து வைத்திருந்தவர்.
திட்டங்கள் அனைத்தையும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொறு வீரருக்கும் புரிய வைக்க முயற்சி செய்தார். ரோகித் அவருடைய பணியை சிறப்பாக செய்தார். மேலும், அவர் பேசும் பொழுது அனைவரையும் ஒரே வகையான பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட சொல்வதும், அந்த பிராண்ட் கிரிக்கெட்டை அவரே முன் நின்று விளையாட செய்வதும் என்பது சிறப்பான ஒன்று. அணியில் இருந்த 11 வீரர்களுமே அவர்களது பங்களிப்பை சிறப்பாக அளித்ததாக நான் நினைக்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் யார்? ராகுல் டிராவிட் குறித்து பிசிசிஐ முடிவு!