சென்னை: இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினர் கரோனா தொற்றுக்கு உள்ளானதால், ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். தொடர்ந்து ட்விட்டரிலும் கரோனா விழிப்புணர்வு தொடர்பாக பல கருத்துகளையும் பதிவிட்டு வந்தார்.
இதையடுத்து, சென்னையில் மக்கள் கரோனா விதிகளைப் பின்பற்றாமல், மாவட்டத்திற்கு உள்ளேயே கூட்டம் கூட்டமாக செல்வதை அஸ்வின், "சென்னையின் உள்ளே பயணிப்பதற்கு எங்கு இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும்" என ட்விட்டரில் நக்கலடித்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, சிறிதுநேரத்திற்குப் பின்னர் அந்த ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளார்.
அஸ்வின் சில தினங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் கூட்டமாக வரிசையில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'ரேஷன் கடையில் நிவாரணத் தொகை வாங்க இவ்வளவு கூட்டமா?' என்று பதிவிட்டார்.
பின்னர், அப்புகைப்படம் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க வந்த மக்கள் கூட்டம் என்பதை அறிந்தவுடன், தவறுதலாகப் பதிவிட்டதற்கு அஸ்வின் மன்னிப்புக்கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இந்திய அணி: இந்த படை போதுமா?