அகமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐசிசி நடத்திய ஆட்டம் போல் இல்லாமல் பிசிசிஐ நடத்திய இரு தரப்பு போட்டி போல் இருந்தது போல் தான் தெரிந்ததாக பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் விமர்சனம் செய்துள்ளார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் நேற்று (அக்.14) குஜராத், அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியை 8 முறை வீழ்த்தி ஒருமுறை கூட தோல்வியே சந்தித்தது கிடையாது என்ற சாதனையை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐசிசி சார்பாக நடத்தப்பட்ட போட்டியை போல் இல்லை என்றும் பிசிசிஐ நடத்தும் இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு கிரிக்கெட் தொடர் போன்று இருந்தது என்றும் பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் தெரிவித்து உள்ளார்.
போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி பிசிசிஐ சார்பாக நடத்தப்பட்ட போட்டியை போன்று உள்ளதாகவும் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக எந்த கோஷமும் வரவில்லை என்றும் தெரிவித்தார். இது தான் தோல்விக்கு காரணம் என தான் கூறவில்லை என்றும் இந்திய அணியை மீண்டும் இறுதி போட்டியில் சந்திக்க ஆதரவாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும், இந்திய வீரர்களுக்கு ஆதரவாக மட்டுமே கோஷங்கள் மற்றும் பாடல்கள் ஒலிக்கப்பட்டதாகவும் ஒருமுறை கூட தில் தில் பாகிஸ்தான் பாடல் ஒலிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தங்களுக்கான ஆதரவு குரல் எழுப்பப்படாதது உளவியல் ரீதியிலான பாதிப்பை தங்களுக்கு ஏற்படுத்தியதாக மிக்கி ஆர்தர் கூறினார்.
இதையும் படிங்க : England Vs Afghanistan : 3 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான்! சூடுபிடிக்கும் இங்கிலாந்தின் ஆட்டம்!