தர்மசாலா : நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் புத்த மத துறவி தலாய்லாமாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதுவரை 22 ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 4 வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. கடைசியாக 22ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.
வரும் 28ஆம் தேதி இதே தர்ம்சாலா மைதானத்தில் நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ள நியூசிலாந்து வீரர்கள், புத்த மத துறவி தலாய்லாமாவை சந்தித்து ஆசி பெற்றனர். நியூசிலாந்து அணி வீரர்கள் கேன் வில்லியம்சன், டாம் லாதம், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய டேரில் மிட்செல், பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் உள்ளிட்ட வீரர்கள் தலாய்லாமாவை சந்தித்து உரையாடினர்.
ரம்மியமான சூழல் நிலவும் இமாச்சல பிரதேசம் வெளிநாட்டு வீரர்களின் விருப்ப இடமாக மாறி உள்ளது. அங்கு நிலவும் குளிர் தட்பவெட்ப நிலை வெளிநாட்டு வீரர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. முன்னதாக இமாச்சல பிரதேசம் சென்ற தென் ஆப்பிரிக்க வீரர்கள், அங்குள்ள மக்களின் தனித்துவமான கலாசாரத்தை அதிகம் விரும்பினர்.
அதேபோல், நெதர்லாந்து வீரர்கள் தர்மசாலா சென்று இருந்த போது, இமாச்சலி காடி நடி மக்களுடன் இணைந்து உள்ளூர் கலாசாரத்திற்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். அந்தளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வந்து உள்ள வெளிநாட்டு வீரர்களின் விரும்பத்தக்க இடமாக இமாச்சல பிரதேசம் மாறி உள்ளது.
இதையும் படிங்க : ஒடிசா கேபினட் அமைச்சரான தமிழக அதிகாரி... யார் இந்த வி.கே.பாண்டியன்! ஐ.ஏ.எஸ் அதிகாரி - அரசியல்வாதி!