சென்னை: ஐபிஎல் ஏலம் விரைவில் வரவிருக்கும் நிலையில், அணியில் உள்ள வீரர்களை பரஸ்பரமாக மாற்றிக் கொள்வதில் தொடங்கி, மற்ற யுக்திகள் வகுக்கும் வரை அணிகள் தயாராகி விட்டன. உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை அடைந்த சோகத்தை, கிரிக்கெட் ரசிகர்களிடையே போக்கும் விதமாக ஐபிஎல் அப்டேட்டுகள் வரத் தொடங்கி விட்டன.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், துபாயில் டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. முன்னதாக அணிகளுக்கு இடையில் வீரர்களை மாற்றிக் கொள்ளும் டிரேட் முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சில அணிகள் தங்களது வீரர்களை மாற்றிக் கொண்டு வருகின்றன.
இதற்கான காலக்கெடு இன்று மாலை 4 மணிக்குள் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அணைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் இன்று (நவ.26) சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அணியின் நட்சத்திர நாயகன் ஹர்திக் பாண்டியா, மீண்டும் மும்பை அணிக்கு 15 கோடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், மும்பை அணியிடம் 50 லட்சம் மட்டுமே இருப்பு உள்ளது.
இதன் காரணமாக இஷான் கிஷன், கேமரான் கிரீன், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய மூவரில் இரண்டு நபர்களை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் அணியின் வீரரான தேவ்தத் படிக்கல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் டிரேட் முறையில் வந்துள்ளார்.
ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த ஷாபாஸ் அஹ்மதி, ஹைதராபாத் அணிக்காகவும், ஹைதராபாத் அணிக்காக ஆடி வந்த மயங்க் டாகர் ஆர்சிபி அணிக்காகவும் டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக, ஐபிஎல்லில் அறிமுகமான இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்த முடிவை தாங்கள் மதிக்கிறோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடி வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டரான ஆன்ரே ரசலை, கொல்கத்தா அணி நிர்வாகம் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பதக்கத்தை உறுதி செய்த சாத்விக் - சிராக் ஜோடி!