ஹைதராபாத்: 19 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணிக்காக சர்வதேச ஆட்டங்களில் தோனி களம் இறங்கிய போது, சுப்மன் கில் என்ற சிறுவன், பஞ்சாபில் ஒரு வயல் வெளியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோரது வரிசையில் தற்போது தனது திறமையாலும், அதிரடி ஆட்டத்தாலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கட்டிப்போட்டுள்ளார் இளம் வீரர் கில்.
16வது ஐபிஎல் யுத்தம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நாளை (மே 28) இறுதிப் போட்டி நடைபெறுகிறது. மகேந்திர சிங் தோனி தலைமையில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிற அணிகளுடன் ஒப்பிடும் போது குஜராத் அணியின் பேட்டிங் வலுவாகவே உள்ளது. அதுவும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை நிலைகுலைய செய்து வருகிறார். மும்பை அணிக்கு எதிரான இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் கில்லின் ருத்ரதாண்டவம், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றுள்ளது. 60 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 129 ரன்களை குவித்து அரங்கத்தையே அதிர வைத்தார் கில்.
இந்திய கிரிக்கெட்டின் இளவரசனாக கொண்டாடப்படும் சுப்மன் கில், ஐபிஎல் தொடரில் அதிக சதங்களை (3 சதங்கள்) விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். குஜராத் அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக பார்க்கப்படும் கில், எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளார். களத்தில் அவர் நிலைத்து நின்றுவிட்டால், அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்துவிடும்.
இந்நிலையில் சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்த, சென்னை அணியின் கேப்டன் தோனி பல வியூகங்களை வகுப்பார் என்பது நிதர்சனம். நடப்பு சீசனில் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது என்றால், அது கேப்டன் தோனியின் அனுபவம் வாய்ந்த வழிநடத்தலே ஆகும். ஒவ்வொரு பந்துக்கும் ஃபீல்டிங்கை மாற்றி, விக்கெட்களை வீழ்த்துவதில் கவனம் செலுத்துவது தோனியின் பிளஸ்.
எனவே நாளை நடைபெறும் ஆட்டத்தில், தோனியின் முதல் குறி சுப்மன் கில்லின் விக்கெட்டாகத்தான் இருக்கும். தீபக் சாஹர், ஜடேஜா, மொயின் அலி, பதிரனா என யாரையாவது பயன்படுத்தி, கில்லின் விக்கெட்டை வீழ்த்த, தோனி பிரத்யேக முயற்சி எடுப்பார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து தோனி தொடர்ந்து மழுப்பலாக பதில் அளித்து வரும் நிலையில், நடப்பு சீசனில் எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை தடுக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கிறார் சுப்மன் கில்.
நாளை 1 லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருக்கும் அகமதாபாத் மைதானத்தில், ஜெயிக்கப் போவது தோனியின் அனுபவமா?... சுப்மன் கில்லின் அதிரடியா?... பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: IPL 2023: ஐபிஎல் பரிசு மழை... வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா?