ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோப்பையை வெல்ல அணிகள் தீவிரம் காட்டுவதால், ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யம் நிறைந்ததாகவே உள்ளது. சில அணிகள் கடைசி ஓவர் வரை சென்று, த்ரில் வெற்றியும் பெறுகின்றன.
அந்த வகையில் இன்று நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதில் சென்னை, டெல்லி ஆகிய அணிகளை வீழத்தியுள்ள அந்த அணி, கொல்கத்தா அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில், அந்த அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங், கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு, குஜராத் அணியிடம் இருந்து வெற்றியை தட்டிப்பறித்தார். இதேபோல், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றியை பதிவு செய்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது. இரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் இருக்கும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற மல்லுக்கட்டுகின்றன.
சொந்த மண்ணில் போட்டி: முதலில் பஞ்சாப் அணியை பற்றி பார்ப்போம். சொந்த மண்ணான மொகாலியில் இன்றைய ஆட்டம் நடைபெறுவதால் பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. கேப்டன் தவான் நல்ல ஃபார்மில் இருப்பதால் சிறப்பான தொடக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கலாம். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 99 ரன்கள் குவித்து, ரசிகர்களை கவர்ந்தார் கேப்டன் தவான். இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் அவர் 225 ரன்களை குவித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங், பனுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், குஜராத் அணிக்கு எதிராக நல்ல ஸ்கோரை குவிக்க முடியும். ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை இன்றைய ஆட்டத்தில், இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டன் களம் இறங்குகிறார். இவரது வருகை பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலம். மேட் ஷார்ட்டுக்கு பதிலாக, ஆடும் லெவனில் லிவிங்ஸ்டன் களம் இறக்கப்படலாம்.
ஆடும் லெவனில் ரபாடா?: பவுலர்களை பொறுத்தவரை நேதன் எல்லீஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், நேதன் எல்லீஸ் ஆகியோர் முழு திறமையை வெளிப்படுத்தினால், குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இந்நிலையில் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்ஸ்மேன் பட்டாளம்: பஞ்சாப் அணியுடன் ஒப்பிடும் போது, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சளைத்தவர்கள் அல்ல. அந்த அணியில் விருத்திமான் சாஹா, சுப்மன் கில், தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா என அதிரடி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அவர் 53 ரன்களும், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்களும் விளாசியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், தமிழக வீரர் விஜய் சங்கர் 24 பந்துகளில் 63 ரன்களை விளாசி அசத்தினார். கடந்த ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் பாண்ட்யா, இன்றைய போட்டியில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கலாம்.
பந்துவீச்சை பொறுத்தவரை முகமது ஷமி, அல்சாரி ஜோசப், ரஷீத் கான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய யாஷ் தயாளுக்கு (4 ஓவர்களில் 69 ரன்கள்) இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைப்பது சிரமம். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்: ஐபிஎல் தொடரை பொறுத்தவரை பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இரண்டு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
போட்டி எங்கே?: பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதும் 18வது லீக் ஆட்டம், மொகாலி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
பஞ்சாப் உத்தேச அணி: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), பனுகா சர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), லியம் லிவிங்ஸ்டன், சாம் கரன், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், நேதன் எல்லீஸ்/ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
குஜராத் உத்தேச அணி: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, ரஷீத் கான், அல்சாரி ஜோசப், ஜோஸ் லிட்டில், முகமது ஷமி, சாய் கிஷோர்.
இதையும் படிங்க: டோனிக்கு ஜடேஜாவின் நினைவுப் பரிசு - எல்லாமே வீணா போச்சு!