கொல்கத்தா: ஐபிஎல் 2023 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டியின் 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் களம் இறங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அஜிங்கியா ரஹானே அரைசதம் கடந்து 71 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்காமல் அணிக்கு வலு சேர்த்துள்ளார். அதேநேரம், டீவன் கான்வாய் அரைசதம் கடந்து 56, ஷிவம் துபே அரை சதம்,ருத்துராஜ் கெய்க்வாட் 36 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. அதேபோல், கொல்கத்தா அணியின் கெஜ்ரோலியா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார்.
இன்றைய ஆட்டத்தில், மகேந்திர சிங் தோனியைக் கேப்டனாகக் கொண்டு விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ருத்துராஜ் கெய்க்வாட், டீவன் கான்வாய், அஜிங்கியா ரஹானே, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதீரானா, துஷர் தேஷ்பாண்டே மற்றும் மஹீஷ் தீக்சனா ஆகியோர் களம் காண்கின்றனர்.
அதேபோல், நிதீஷ் ரானாவைக் கேப்டனாகக் கொண்டு களம் ஆடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஜாசன் ராய், ஆண்ட்ரே ரூசல், ரிங்கு சிங், சுனில் நரைன், டேவிட் ஒயிஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, சுயாஷ் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுகின்றனர்.
ஐபிஎல் 2023 போட்டியில் இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டத்தில், 4 வெற்றி - 2 தோல்வி என 6 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3வது இடத்திலும், 2 வெற்றி - 4 தோல்வி என 6 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி 8வது இடத்திலும் உள்ளது.
இதையும் படிங்க: RCB vs RR: சொந்த மண்ணில் 'கெத்து' காட்டிய பெங்களூரு: 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி