டெல்லி: ஐபிஎல் தொடரின் 67வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே களம் இறங்கினர்.
இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். 50 பந்துகளை சந்தித்த அவர் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 79 ரன்களை குவித்தார். மேலும் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 141 ரன்களை சேர்த்தது.
பின்னர் களம் இறங்கிய ஷிவம் துபே 22 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய கான்வே 87 ரன்களுக்கு (3 சிக்ஸர், 11 பவுண்டரி) ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. ஜடேஜா 20, தோனி 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். டெல்லி அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை கலீல் அகமது, நார்ஜியா, சக்காரியா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.