மும்பை: இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கதா, டெல்லியை பேட்டிங் செய்ய பணித்தது.
அதன்படி முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஓப்பனர்கள் பிரித்திவி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
29 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் பிரித்திவி ஷா 51 ரன்களும், 45 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் டேவிட் வார்னர் 61 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ரிஷப் பண்ட் தன் பங்குக்கு 14 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்தார்.
கடைசி வரை அக்ஸர் பட்டேலும், ஷர்துல் தாகூரும் அவுட் ஆகாமல் முறையை 22 மற்றும் 29 ரன்கள் குவித்தனர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரூ ருசேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை எட்டிப் பிடிக்கும் முனைப்பில் கொல்கத்தா பேட்டிங்-ஐ தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரரான ரகானே 8 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதற்கிடையில் மற்றொரு தொடக்க வீரரான வெங்கடேஷ் ஐயர் 18 ரன்னில் நடையை கட்டினார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் நிலைத்துநின்று ஆடி 33 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.
அவர் 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸருடன் இந்த ரன்னை குவித்தார். அவருக்கு பக்க பலமான நிதிஷ் ராணா 20 பந்துகளில் 30 ரன்கள் (3 சிக்ஸர்) அடித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை.
ஆண்ட்ரூ ருசேல்-ஐ களத்தில் விட்டுவிட்டு சாம் பில்லிங்ஸ் (15), பேட் கம்மின்ஸ் (4), சுனில் நரேன் (4) மற்றும் உமேஷ் யாதவ் (0) என பெவிலியன் திரும்பினர். கடைசி 2 ஓவரில் அணியின் வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டது.
கைவசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. இந்த நிலையில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், கலீல் அஹமது 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், லலித் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதையும் படிங்க : IPL 2022: அடுத்த போட்டி.. ஆர்ஆர், எல்எஸ்ஜி மோதல்.. வீரர்கள் விவரம்