மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாராஷ்டிராவில் நடந்துவருகிறது. இன்று, (ஏப். 9) 17ஆவது லீக் ஆட்டம் டிஒய் படில் மைதானத்தில் நடந்தது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்ட இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது. அந்த வகையில், 155 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஹைதராபாத் அணி வீரர்கள் களமிறங்கினர்.
தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா, கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதன்படி சர்மா 50 பந்துகளில் 75 ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தார். மறுப்புறம் வில்லியம்சன் 40 பந்துகளுக்கு 32 ரன்களை எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி வெறும் 15 பந்துகளில் 39 ரன்களை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
அதன்படி 17.4 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி ஹைதராபாத் அணிக்கு சீசனின் முதல் வெற்றியாகும். மறுபுறம் சென்னைக்கு நான்காவது தோல்வியாகும். தொடர் தோல்வியால் சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
அதேபோல, மும்பை அணியும் தனது மூன்று தொடர் தோல்விகளுக்கு பிறகு இன்று பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில், சென்னையை போல மும்பை அணி தோல்வியில் மூழ்குமா அல்லது ஹைதராபாத் அணிபோல மீளுமா என்பதை தெரிந்துகொள்ள மும்பை அணி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
இதையும் படிங்க: ரிக்கி பாண்டிங்கிடம் மனவலிமையை பெற்றேன்- லலித் யாதவ்!