மெல்போர்ன் (ஆஸ்திரேலியா): இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 13ஆவது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கியது. பயோ-பபுளில் இருந்த வீரர்களுக்கு ஏற்பட்ட கரோனா பரவலால் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதுவரை 29 லீக் போட்டிகள் நிறைவுற்ற நிலையில், மீதமுள்ள லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கெனவே, சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் யுஏஇ சென்றுவிட்டனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது நாட்டு வீரர்கள் யுஏஇயில் நடைபெறும் ஐபிஎல் இரண்டாம் கட்டப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கும் வகையில் தடையில்லா சான்றிதழை வழங்கியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கு பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க ஏதுவாக இருக்கும் என்பதாலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடதக்கது.
ஐபிஎல்லில் ஆஸ்திரேலிய வீரர்கள்
டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ,மேக்ஸ்வெல் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் முக்கிய இடம் வகிக்கின்றனர் என்பதால் அவர்கள் ஐபிஎல்லில் விளையாடுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடும் பாட் கம்மின்ஸ் தனக்கு மகள் பிறந்திருப்பதால், ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்களான ஆடம் ஸாம்பா, ஆண்ட்ரூ டை ஆகியோர் கரோனா தொற்று அச்சம் காரணமாக தொடரிலிருந்து பாதியில் விலகினர். ஜாஷ் ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ், ஜோஷ் பிலிப் தொடர் தொடங்கும் முன்பே ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
மாலத்தீவில் தனிமை
ஐபிஎல் போட்டிகள் மே 2ஆம் தேதி கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட பின்னர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள், ஒளிபரப்பாளர்கள், உதவி பணியாளர்கள் என 40 பேர் மாலத்தீவில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன்பின்னர், பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த தனி விமானத்தில் அவர்கள் ஆஸ்திரேலியா திரும்பியது இங்கு நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: துக்க நாள்: தோனி ஓய்வு பெற்று ஓராண்டு நிறைவு!