ஐபிஎல் 2020 தொடரில் லீக் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில், புள்ளிகள் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ள டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
இதில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான வார்னரும் சஹாவும் முதல் 10 ஓவர்களில் 107 ரன்கள் குவித்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர். இறுதியில் அந்த அணி 20 ஒவர்களில் 219/2 ரன்களை குவித்தது. இதனையடுத்து 220 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் டெல்லி அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்து.
போட்டி முடிந்த பின் பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில் "பவர்ப்ளேவிலேயே நாங்கள் ஆட்டத்தை இழந்துவிட்டோம். முதல் ஆறு ஓவர்களில் 70 ரன்கள் எடுத்தது மிகவும் பாராட்டத்தக்கது, எங்கள் பந்து வீச்சாளர்களை அவர்கள் எதிர்கொண்ட விதம் ஆச்சரியமாக இருந்தது.
நிச்சயமாக இது எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு. எங்களுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன, அதில் ஒரு போட்டியிலாவது வெற்றிப்பெறுவது மிகவும் முக்கியம். தொடர்ச்சியான தோல்விகள் சோர்வடைய செய்யும், ஆனால் அணியில் உள்ள இளம் வீரர்கள் உண்மையிலேயே உந்துதல் பெற்றவர்கள். அடுத்த போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்துவோம்.” என்றார்.