மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியை எதிர்த்து மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணி ஆடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி கேப்டன் மிதாலி ராஜ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய சூப்பர்நோவாஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்தது. பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெலாசிட்டி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
அந்த அணியின் முக்கிய வீராங்கனையான டேனியல் வியாட், ரன் ஏதும் எடுக்காமல் காஹா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் மிதாலி ராஜ் - ஷஃபாலி இணை களத்தில் சேர்ந்தது.
ஷஃபாலி அதிரடியாக நான்கு பவுண்டரிகளை விளாசி, 3ஆவது ஓவரின் கடைசி பந்தில் காஹாவிடம் 17 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். பின்னர் அனுபவ வீராங்கனைகள் மிதாலி - வேதா இணை நிதானமாக ஆடியது. நிலையாக நின்று ஆடலாம என பொறுமை காத்த மிதாலி, சிரிவர்தனே வீசிய பந்தில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சுஷ்மா வர்மாவுடன் இணைந்து வேதா பவுண்டரிகளாக விளாசி ஸ்கோரை உயர்த்தினார். 10 ஓவர்களில் 44 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த வெலாசிட்டி அணி, அடுத்த இரண்டு ஓவர்களில் 15 ரன்களை சேர்த்தது. 13ஆவது ஓவரின் இறுதியில் வேதாவும் 29 ரன்களில் ஆட்டமிழக்க, சுஷ்மா வர்மா - லூஸ் இணை களத்தில் சிக்சர் மழை பொழிந்தது.
பூனம் யாதவ் வீசிய 16ஆவது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட இந்த இணை, 17ஆவது ஓவரிலும் ஒரு சிக்சரை விளாசியது. இதனால் கடைசி மூன்று ஓவர்களில் 25 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது.
18ஆவது ஓவரில் லூஸ் ஒரு பவுண்டரி விளாசியதால், அந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதனால் 2 ஓவர்களில் 15 ரன்கள் வெலாசிட்டி அணியின் வெற்றிக்குத் தேவைப்பட்டது.
19ஆவது ஓவரில் முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், சுஷ்மா வர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் சேர்ந்தன. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது.
அந்த ஓவரின் 2ஆவது பந்தில் பவுண்டரி அடிக்க, ஆட்டம் பரபரப்பானது. அதற்கடுத்த இரண்டு பந்துகளில் சிங்கிள்கள் அடிக்க, 5ஆவது பந்தில் பவுண்டரி அடித்து வெலாசிட்டி அணியை லூஸ் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்து சூப்பர்நோவாஸ் அணியை வெலாசிட்டி அணி வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடிய லூஸ் 21 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: “இலக்கை அல்ல, ஆட்டத்தை முடிக்கவே நினைத்தேன்”- மார்தட்டும் ரஹானே!