ஐபிஎல் தொடரில் இன்று (அக்.24) நடைபெற்ற 42ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நிதீஷ் ராணா, சுனில் நரைன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர்.
இதன் மூலம் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராணா 81 ரன்களையும், சுனில் நரைன் 63 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில், இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ரஹானே பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவானும் ஆறு ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து, 27 ரன்களில் ரிஷப் பந்த், வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும் 47 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் வருணின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் டெல்லி அணியின் தோல்வியும் உறுதியானது.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கேகேஆர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கேகேஆர் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: மாமனாருக்கு மைதானத்தில் அஞ்சலி செலுத்திய மருமகன்!