2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. இதனால் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பும் பறிபோகும் நிலை ஏற்பட்டது.
ஆனால் முக்கியமான நேரத்தில் எழுச்சி கண்ட பஞ்சாப், மும்பை அணிக்கு எதிரான போட்டியின்போது விஸ்வரூபம் எடுத்தது. ஒவ்வொரு வருடமும் ஆர்சிபி அணி வெல்லும் ரசிகர்களின் இதயத்தை, இந்த வருடம் பஞ்சாப் அணி வென்றது. தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த அணி, தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்று ப்ளே ஆஃப் ரேசில் முன்னிலையில் இருக்கிறது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறுகையில், '' பஞ்சாப் அணியை கேஎல் ராகுல் மிகச்சிறப்பாக வழிநடத்துகிறார். கேப்டன்சியில் சிறப்பாக முன்னேறி வருகிறார். அதேபோல் பேட்டிங்கிலும் கலக்கியுள்ளார். 11 போட்டிகளில் 567 ரன்கள் என்பது சாதாரண விஷயமல்ல. கடந்த போட்டியில் 126 ரன்களை டிஃபெண்ட் செய்ததெல்லாம் மிகச்சிறந்த கேப்டன்சியால் தான் முடிந்தது.
இதற்கு அனில் கும்ப்ளேவும் முக்கிய காரணம். ஏனென்றால் அனில் கும்ப்ளே மிகச் சிறந்த போராட்ட குணத்தைப் பெற்றவர். அவரது குணத்தை கிங்ஸ் லெவன் அணிக்கு கடத்தியுள்ளார். செய்ய முடியாத காரியங்களை எளிதாக கிங்ஸ் லெவன் அணி செய்துள்ளது'' என்றார்.
இன்று இரவு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ பரப்புரைக்கு ஆதரவளித்த பாண்டியா!