ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டனாக ரோஹித் ஷர்மா வலம் வருகிறார். இதைப்பற்றி முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில், ''இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்படவில்லை என்றால், அது நமக்குதான் இழப்பு. அவருக்கு எவ்வித இழப்பும் இல்லை.
ஒரு அணி சிறப்பாக இருந்தால்தான் கேப்டனும் சிறந்த கேப்டனாக வலம்வர முடியும். அதை நான் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இங்கே கேப்டனை மதிப்பிடுவதற்கான அளவுகோல் என்ன? யார் நல்ல கேப்டன், யார் நல்ல கேப்டன் இல்லை என்பதை எப்படி அறிய முடியும்?
எம்.எஸ்.தோனியை ஏன் நாம் அனைவரும் இந்தியாவின் சிறந்த கேப்டன் என்று கூறுகிறோம்? ஏனென்றால் டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பை, மூன்று ஐபிஎல் கோப்பைகளை அவர் வென்றுள்ளார் என்பதால்தான். அதேபோல் தான் ரோஹித் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன் இவர் தான். இவர் ஒருநாள், டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்றால் அது அவமானம். இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 என இரு கேப்டன்களை நியமனம் செய்ய வேண்டும். நான் யாரையும் கேப்டன்சியில் சரியில்லை என்று கூறவில்லை.
கோலியின் கேப்டன்சியைவிட இவர் சிறப்பாக இருக்கிறார் என்று தான் கூறுகிறேன். ஐபிஎல் என்ற அளவுகோலை வைத்துப் பார்க்கும்போது ரோஹித் சிறந்த கேப்டனாக இருக்கிறார்.
2013ஆம் ஆண்டிலிருந்து கோலி, ரோஹித் இருவரும் ஒன்றாக தான் கேப்டன்சியை கையில் எடுத்தார்கள். இப்போது எந்த நிலையில் உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். என்னைப் பொறுத்தவரை ஒரு தலைவராக ரோஹித் நல்ல கேப்டனாக இருப்பார் என்று நினைக்கிறேன்'' என்றார்.
ஏற்கனவே ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து கோலியை நீக்க வேண்டும் என்று கம்பீர் பேசிய நிலையில், தற்போது ரோஹித்தை டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமனம் செய்ய வேண்டும் எனப் பேசியுள்ளது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ”பயோ பபுளில் இருப்பது சாதாரண காரியமல்ல” அனைத்து அணி வீரர்களையும் பாராட்டிய கங்குலி!