ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று (அக்.02) நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர், மனீஷ் பண்டே, கேன் வில்லியம்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா - பிரியாம் கார்க் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கேரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரியாம் கார்க், 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரியாம் கார்க் 51, அபிஷேக் சர்மா 31 ரன்களையும் எடுத்திருந்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில் வழக்கம்போல் வாட்சன் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த ராயுடு 8 ரன்களிலும், கேதர் ஜாதவ் 3 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தனர்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாப் டூ பிளேசிஸ், 22 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, சிஎஸ்கே அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மகேந்திர சிங் தோனி - ரவிந்திர ஜடேஜா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியைத் தவிர்க்க போராடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 33 பந்துகளில் அறைசதமடித்து அசத்தினார்.
இருப்பினும் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி, இந்தச் சீசனில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.