ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மேலும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, தொலைக்காட்சி வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ், பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவரும் கறுப்பு பட்டை அணிந்து மைதானத்தில் நுழைந்தனர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ப்ரித்வி ஷா - ஷிகர் தவான் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ப்ரித்வி ஷா, ஐபிஎல் தொடரில் தனது ஐந்தாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன் மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ப்ரித்விஷா 64 ரன்களை விளாசினார். சென்னை அணி தரப்பில் பியூஷ் சாவ்லா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, வழக்கம்போல தொடக்க வீரர்கள் முரளி விஜய், ஷேன் வாட்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆனால் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாப் டூ பிளேசிஸ் அணியை தோல்வியிலிருந்து மீட்கத் தனி ஒருவனாகப் போராடிவந்தார். இறுதியில் அவரும் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்கவும், சென்னை அணியின் தோல்வி உறுதியானது.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி, இந்த சீசனில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: ஆர்சிபி vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஆட்டத்தை மாற்றிய தருணங்கள்!