2019 ஐபிஎல் டி20 தொடர் மார்ச் 23ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் ஆரம்பித்த சில தினங்களிலே ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் செய்த 'மன்கட் விக்கெட்' முறை சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியுற்றிருந்ததால் நேற்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இரு அணி வீரர்களும் களமிறங்கினர்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியில் முன்வரிசை வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை எகிறச் செய்தனர். இறுதிகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவும் தன் பங்கிற்கு 14 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த அணியின் கேப்டன் கோலி 46 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் இறுதிகட்டத்தில் பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி பெங்களூரு ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.
ஒரு கட்டத்தில் அந்த அந்த அணியின் வெற்றிக்கு இறுதி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சிக்சர் அடித்து டிரா செய்தால் மேட்ச் சூப்பர் ஓவர் சென்றிருக்க கூடும். ஆனால் மலிங்கா வீசிய கடைசி பந்தை துபே எதிர்கொண்டபோது அந்த பந்தில் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. இதனால் மும்பை அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஆனால் பின்னர் டிவி ரீப்ளேயில் பார்த்தபோது மலிங்கா வீசிய அந்த பந்து, நோ-பால் என்பது தெளிவாக தெரிந்தது.
இது மைதானத்தில் இருந்த பெங்களூரு அணியின் கேப்டன் கோலி, மற்றும் ரசிகர்களை கடுப்படையச் செய்தது. நோ-பால் என்று தெளிவாக தெரிந்தும் நோ-பால் வழங்காத அம்பயரின் முடிவால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
போட்டி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கூறுகையில்,
"நாம் விளையாடிவருவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், கிளப்பில் ஆடும் கிரிக்கெட் போட்டி அல்ல. ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் கடைசி பந்தில் வீசப்பட்ட நோ-பாலை அம்பயர் அறிவிக்காதது கேலிக்குரிய விஷயமாகும். அந்த பந்தில் அம்பயர் நோ-பால் என அறிவித்திருந்தால், இது முற்றிலும் மாறுபட்ட போட்டியாக அமைந்திருக்கும்.
எனவே அம்பயர்கள் இதுபோன்ற தருணங்களில் தங்களது கண்களை நன்றாக திறந்து பார்த்து சரியான தீர்ப்பு சொல்ல வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க வீரர் டூ பிளசிஸ் தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், 'அவர் கிரிக்கெட் போட்டிகளில் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பல சமயங்களில் நோ-பால்களை கவனிக்க அம்பயர்கள் தவறி விடுகின்றனர். எனவே, நோ-பால் வீசப்படும் சமயத்தில் மூன்றாவது நடுவர் களத்தில் உள்ள நடுவரிடம் மைக் மூலமாக தெரிவிக்கலாம்' என குறிப்பிட்டிருந்தார்.