சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. தனது பாட்டி இறந்துவிட்டதால் அவர் நியூசிலாந்துக்கு சென்றுள்ளார். இதனால், இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் செயல்பட்டுவருகிறார்.
இதைத்தொடர்ந்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக வார்னர், பேயர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர்.
அணியின் ஸ்கோர் ஐந்து ரன்களை எட்டியிருந்தபோது, பேயர்ஸ்டோவ் ரன் ஏதும் அடிக்காமல் ஹர்பஜனின் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மணிஷ் பாண்டே - வார்னர், சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
இவ்விரு வீரர்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு 115 ரன்களை சேர்த்த நிலையில், வார்னர் 57 ரன்களுடன் ஹர்பஜனின் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆனார்.
அவரைத் தொடர்ந்து வந்த விஜய் சங்கர் தன்பங்கிற்கு அதிரடியாக ஆடினார். 20 பந்துகளில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்களுடன் தீபக் சஹாரின் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். மறுமுனையில், அதிரடியாக விளையாடிய மணிஷ் பாண்டே 83 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 43 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரி, 3 சிக்சர்களை பறக்கவிட்டார்.
இதனால், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்களை குவித்துள்ளது. சென்னை அணி தரப்பில் ஹர்பஜன் சிங் இரண்டு விக்கெட்டுகளையும், தீபக் சஹார் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.