ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தல தோனி இந்தப் போட்டியில் டக் அவுட் ஆகுவதில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆனார். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 5.2 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
இந்த இக்கட்டான தருணத்தில், களம்புகுந்த தோனி, ராஜஸ்தான் வீரர் ஆர்ச்சர் வீசிய 6ஆவது ஓவரின் நான்காவது பந்தை தடுப்பாட்டம் ஆடமுயற்சித்தார். அந்த ஷாட் இன்சைட்எட்ஜ் ஆகியதால் அவரது கால் நடுவே சென்ற பந்து ஸ்டெம்பை லேசாக தாக்கியது.
ஆனால், ஸ்டெம்பில் இருந்து எல்.இ.டி. விளக்கு ஒளிரவில்லை, அதுமட்டுமின்றி பெயில்சும் கீழே விழவில்லை. இதனால் தோனி டக் அவுட் ஆகுவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதை கண்ட, ராஜஸ்தான் வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோர்அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து, சிறப்பாக ஆடிய தோனி 46 பந்துகளில் நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர்களுடன் 75 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.