12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 46ஆவது லீக் போட்டி டெல்லி ஃவெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, டெல்லி அணியில் பிரித்விஷா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவ்விரு வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 35 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில், பிரித்விஷா 18 ரன்களுக்கு வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூரு அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்களை சேர்த்த நிலையில், தவான் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், டெல்லி அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை எடுத்திருந்தது.
தவான் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, ரிஷப் பந்த் 7 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களிலும், காலின் இங்ரம் 11 ரன்களிலும் வரிசையாக பெவிலியன் திரும்பினர். இதைத்தொடர்ந்து, ரூதர்ஃபோர்டு - அக்சர் படேல் ஜோடி ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடியது. கடைசி இரண்டு ஓவர்களில் இந்த ஜோடி 36 ரன்களை சேர்த்ததால், டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்களை குவித்துள்ளது.
ரூதர்ஃபோர்டு 13 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 28 ரன்களுடனும், அக்சர் படேல் 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 16 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணி தரப்பில் சாஹல் இரண்டு, நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.