மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் லேஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மொகாலியில் தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி மொயின் அலி, டி வில்லியர்ஸ், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் என மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கினார். கடந்த போட்டியில் டிம் சவுதிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணியில் ஹர்துஸ் வில்ஜோயன், கருண் நாயர், அன்கீட் ராஜ்பூட் ஆகியோருக்கு பதிலாக ஆன்ட்ரூவ் டை, மயங்க் அகர்வால் மற்றும் முருகன் அஷ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர். கடந்த போட்டியில் சதம் விளாசிய கே.எல்.ராகுல் இப்போட்டியில் 18 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். அவரைத் தொடர்ந்து வந்த மயங்க் அகர்வால் 15 ரன்களில் நடையைக் கட்டினார். இதனிடையே கெயில் தொடக்கத்தில் ரன் அடிப்பதற்கு சற்று தடுமாறினாலும் பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 27ஆவது அரைசதம் விளாசினார்.
சற்றுமுன் வரை பஞ்சாப் அணி 9 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. கெயில் 50 ரன்களுடனும், சர்ஃப்ராஸ் கான் ரன் ஏதும் அடிக்காமலும் களத்தில் உள்ளனர்.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணி ஆடிய ஆறுப் போட்டிகளிலும் தோல்வியுற்றதால், இன்றைய போட்டியில் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டயாத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மறுமுனையில், பஞ்சாப் அணி இந்தத் தொடரில் ஆடிய 7 போட்டிகளில் 4-ல் வெற்றி, 3-ல் தோல்வி என 8 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.
பெங்களூரு அணியின் நடச்சத்திர வீரரான டி வில்லியர்ஸ் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் ஆட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அவர் சொன்னதைப் போலவே, இன்று கோலி மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் களம்புகுந்துள்ளார்.
முன்னதாக சென்னை அணியின் கேப்டன் தோனி தொடர்ந்து மூன்று போட்டிகளில் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.