ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42ஆவது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இதில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 82, மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 46 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தனர்.
பஞ்சாப் அணி சார்பில் ரவி அஷ்வின், முருகன் அஷ்வின், முகமது ஷமி, ஹர்துஸ் வில்ஜோயின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, 203 ரன் கடின இலக்கை விரட்ட பஞ்சாப் அணியில் கெயில், கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டத் தொடங்கிய கெயில் 10 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்களை எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அப்போது பஞ்சாப் அணி 3.2 ஓவர்களில் 42 ரன்களை எடுத்திருந்தது.
பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவ்விரு வீரர்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு 59 ரன்களை சேர்த்த நிலையில், மயங்க் அகர்வால் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் 42 ரன்களில் அவுட் ஆனார்.
இதன் பின்னர், டேவிட் மில்லர் - நிகோலஸ் பூரான் ஆகியோர் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதையடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 36 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது, 18ஆவது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் ஆறு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து பஞ்சாப் அணிக்கு நெருக்கடி அளித்தார். இதைத்தொடர்ந்து, நவ்தீப் சைனி வீசிய 19ஆவது ஓவரின் முதல் பந்தில் சிறப்பாக ஆடி வந்த டேவிட் மில்லரும், அந்த ஓவரின் கடைசி பந்தில் நிகோலஸ் பூரானும் ஆட்டமிழந்தனர். மேலும் அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
இதனால், கடைசி ஓவரில் 27 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில், உமேஷ் யாதவ் கடைசி ஓவரை வீசினார். அவரது பந்துவீச்சில் அஷ்வின், ஹர்துஸ் வில்ஜோயின் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பெங்களூரு அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3, நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.