ஐபிஎல் தொடரின் 12ஆவது சீசனின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில், சென்னை - பெங்களூரு அணிகள் மோதிக் கொண்டன. ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் வலுவான அணிகள் என்பதால், இந்தப் போட்டியை கோடிக்கணக்கான ரசிகர்கள், மைதானம் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில், இந்தப் போட்டியைக் காண நடிகர் ரஜினிகாந்த் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வருகை தந்தார். அவரது வருகையை பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தனர். இதனால், மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் மைதானத்தில் போட்டியைக் கண்டுக் களித்தார்.
இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி, சென்னை அணியின் அசத்தலான பந்துவீச்சினால் 70 ரன்களுக்கு சுருண்டது. இதைத்தொடர்ந்து, நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்திய சென்னை அணி 17.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழந்து 71 ரன்களை எட்டி வெற்றிப் பெற்றது.