சென்னையில் தொடங்கிய ஐபிஎல் 12ஆவது சீசனின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, ஆர்சிபி அணியுடன் மோதியது. இதில், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோரின் துல்லியமான சுழற்பந்துவீச்சினால் சென்னை அணி ஏழுவிக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது150ஆவது ஆட்டத்தில் விளையாடிய ஹர்பஜன் சிங், கோலி, டிவில்லியர்ஸ், மொயின் அலி என ஆர்சிபி அணியின் மூன்று முக்கியப் புலிகளின் விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதன் பலனாக, நேற்று அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதைத்தொடர்ந்து, 70 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பெங்களூரு அணியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்துவருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுடன் ஹர்பஜன் சிங்கும் இணைந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், என்ன ஆர்சிபி...இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ... என தமிழில் பதிவிட்டு கலாய்த்துள்ளார். அத்துடன் கேஜிஎஃப் படத்தில் வரும் பின்னணி இசையான 'தந்தானி நானே தானி தந்தானோ' என்றும் சேர்த்து ட்வீட் செய்து தனது குசும்புத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.